Skip to main content

மிக்ஜாம் புயல் பாதிப்பு; வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவுறுத்தல்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mijam storm damage; Minister Thangam Southern State Important Instructions to Auto Insurance Companies

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான வாகனங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் சேதமடைந்துள்ளன. அதே சமயம் காப்பீடு செய்யப்பட்ட சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள். மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருடன் இன்று (8.12.2023) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத்தின் 13 முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், இதுவரை 600 இருசக்கர, 1275 நான்கு சக்கர மற்றும் 445 வணிக வாகனங்கள் என மொத்தம் 2,320 மோட்டார் வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன எனத் தெரிவித்தனர். இதனையும் இனிவரும் நாட்களில் பெறப்படும் காப்பீட்டு விண்ணப்பங்களையும் உடனடியாக தீர்வு செய்வதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட இத்தருணத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவும் விதமாக விரைந்து செயலாற்றவும் வலியுறுத்தினார்.

அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும், உதவி மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் அமைத்தும் எளிதான முறையில் வாகன காப்பீட்டுத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. இப்பேரிடர் நிவாரண காலத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட உதவிடும் வகையில் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

சார்ந்த செய்திகள்