யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தேனியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் பயன்படுத்திய காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி அவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். அதே சமயம் விடுதியில் தங்கி இருந்தபோது கஞ்சாவை வைத்திருந்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பலமுறை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. இருப்பினும் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் சிறப்பு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை தேனி மாவட்ட போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.