மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை, கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் அஜ்மத். இவருடைய மனைவி, ரித்திக் வர்மா (21) என்பவரோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளியே சென்று வீட்டுக்கு வந்த அஜ்மத், தனது மனைவியும் ரித்திக் வர்மாவும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த அஜ்மத், மனைவியையும் ரித்திக் வர்மாவையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் அடிப்பட்டு ரித்திக் வர்மா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அங்கு வந்த உறவினர்கள் ரித்திக் வர்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரித்திக் வர்மா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அஜ்மத் மீது பாரத் நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை கணவர் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.