Skip to main content

நீங்க ரெண்டு பேரும் போயிட்டா மொத்தப் பணமும் எனக்குத் தானே..?! பணத்திற்காக தாய், தந்தையை கொன்ற தனயன்!  

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

"எங்க அம்மாச்சி இயற்கையாக சாகலை மாமா தான் கொன்னுப் போட்டது." என காவல்நிலையத்தினை பேரன் நாட, லட்ச ரூபாய் பணத்திற்காக தாய், தந்தையை கொலை செய்த கற்பழிப்பு குற்றவாளியான மகனை கைது செய்து பெருமையைத் தேடிக்கொண்டது தேவக்கோட்டை தாலுகா காவல்துறை.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கண்ணங்கோட்டை உடப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்லாயி. இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்த நிலையில், தற்பொழுது இரு மகன்கள் மட்டும் உயிரோடு இருக்கின்றனர். இதில் மூத்தமகனான முத்து கண்பார்வையற்றவர். இளையமகன் சோனைமுத்துவிற்கு சுகன்யா எனும் மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆறுமுகம் செல்லாயி தம்பதியினரின் மகளான செல்வி இறந்துவிட்ட நிலையில் அவரது மகனான பாண்டி என்பவரை வளர்த்து வந்தனர் இருவரும். 

 

incident in sivakangai.... police investigation

 

இது இப்படியிருக்க, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் மர்மமான முறையில் இறக்க, இயற்கையான மரணம்தான் என அடக்கம் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி செல்லாயி அம்மாள் வீட்டின் பின்புறமுள்ள ஆட்டுக் கொட்டகையில் வாயில் நுரையில் தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். " உடலில் விஷம் செலுத்தப்பட்டு இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையும், அம்மாச்சியைக் கொன்றது மாமாதான் என பேரன் பாண்டி புகார் அளித்ததும் ஒரு சேர நிகழ, சந்தேகத்திற்குரிய இளையமகன் சோனைமுத்துவை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தது இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான டீம். 

அதன்பிறகு லட்ச ரூபாய் பணத்திற்காக தாய் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டவன் தந்தையை புதைத்த கண்ணங்கோட்டை சுடுகாட்டிற்கு சென்று புதைத்த இடத்தை அடையாளம் சுட்டிக்காட்டியதையடுத்து பிரேதத்தை தோண்டி எடுத்து, எலும்புக்கூடாக இருந்த ஆறுமுகத்தின் உடற்கூறுகளை எடுத்து ராமநாதபுரம் உடற்கூறு சோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.

 

incident in sivakangai.... police investigation

 

சோனைமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலத்திலோ, "உடப்பம் பட்டி மின்சார டவர் அருகே ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வருவதால் எங்களுக்கு சொந்தமான நிலத்தை அரசு எடுத்துக்கொண்டது. அதற்கான இழப்பீடுத் தொகையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அரசு வழங்கியது. இழப்பீடாக வந்த ஒரு லட்ச ரூபாயை எனக்கு, என் அண்ணன், அப்பா, அம்மா மற்றும் சகோதரி மகன் பாண்டிக்குமாக சேர்த்து ஐந்து பங்காக பிரிப்பதாக சொன்னார் அப்பா அதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்தப் பணத்தையும் எனக்குக் கொடுக்க வேண்டுமென மிரட்டிப் பார்த்தேன். யாரும் பணியவில்லை. அதனால் என்னுடைய மாமியார் தெய்வானையின் யோசனைப்படி அப்பாவை அடித்துக் கொன்று இயற்கையான மரணமாக மாற்றினேன். அதன் பிறகு இப்பொழுது அம்மாவிற்கு விஷம் கொடுத்து கொன்றேன். இப்பொழுது சிக்கிக் கொண்டேன்." என்றிருக்கின்றான் அவன்.

தாய், தந்தையை கொலை செய்த சோனைமுத்து, கடந்த 2016ம் ஆண்டில் தேவகோட்டை தனியார் பள்ளி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. பணத்திற்காக பெற்றோர்களை கொலை செய்த சம்பவத்தால் நகரமே பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்