விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் வரும் சில காட்சிகள் இணைக்கப்பட்டு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரைலர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. இப்படம் வருகிற 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸியாகவுள்ளார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அதில் தொகுப்பாளர், தெலுங்கில் கங்குவா படமும் தி கோட் படமும் தோல்வியடைந்ததாக சொல்லி ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் புரொமோஷனுக்காக வந்திருக்கிறேன். மற்ற படங்கள் குறித்து நான் ஏன் பேச வேண்டும். அதற்கு நான் முன்பே பதிலும் சொல்லிவிட்டேன். எனக்கும் அது நடந்து இருக்கிறது. என்னையும் மக்கள் ட்ரோல் செய்தார்கள். அது பொதுவாக நடப்பதுதான். எல்லாரும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான் படம் எடுக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “படம் வெளியாவதற்கு முன்பு மக்களிடம் காண்பித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிவோம். என்னுடைய தோல்வி படங்களைக் கூட மக்களுக்கு போட்டுக் காட்டி கருத்துகளை கேட்டிருக்கிறோம். எல்லோரும் அதை செய்ய வேண்டும்” என்றார்.