நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக அறியப்படும் துரைமுருகன், சாட்டை என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்களை விமர்சித்ததாகப் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த துரைமுருகன், ஜாமீனில் வெளிவந்திருந்தார். இந்நிலையில், திருச்சியில் மீண்டும் சாட்டை துரைமுருகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுங்குவார்சத்திரத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார், ஆட்சியர், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அப்போராட்டத்தில் பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் 'ஃபாக்ஸ்கான்' தனியார் தொழிற்சாலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். அதேபோல் விடுதிகளில் சரியான உணவுகள் வழங்கப்படவில்லை, மருத்துவ வசதி இல்லை, கொத்தடிமைகளைப் போல நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் வைத்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் குறித்து சாட்டை துரைமுருகன் அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மீது அவதூறு பரப்பியதாகத் திருச்சி பிராட்டியூர் அருகே உள்ள அலுவலகத்திலிருந்த சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் என்று கூறிக்கொண்டு வந்த ஏழு பேர் தனது கணவரை அழைத்துச் சென்றதாகவும் அவரை மீட்டுத் தரக் கோரியும் சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி திருச்சி மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.