உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹ்ரிர்' என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஆறு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர். மருத்துவர் ஹமீது உசேன், அவருடைய தந்தை மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய ஆறு நபர்களை போலீசார் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதற்காக ஆவணங்கள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ராயப்பேட்டை ஜானி ஜான்கான் சாலையில் உள்ள மண்டபத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் யூடியூப் மூலமாக பிரசங்கம் செய்து தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக தெரிந்தது. அந்த இடத்தில் தற்பொழுது தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு விசாரணை செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் இன்னும் யார் யார் இருக்கிறார்கள்; எத்தனை நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக ஆதரவாக இருந்திருக்கிறார்கள்; இவர்களின் நோக்கம் என்ன; ஏதேனும் சதிச் செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.