விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகில் உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் சந்திரசேகர்(31). பொறியியல் பட்டம் படித்த இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கரோனா நோய் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்த சந்திரசேகர், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் தனது அலுவலகப் பணியை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருந்தார்.
அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது தான் பிறந்த ஊரைச் சுற்றி பார்ப்பது கோவில்களுக்கு செல்வது நண்பர்களுடன் பேசுவது என்று நேரத்தை கழித்து வந்துள்ளார். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஊரில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெரு சேரும் சகதியுமாக மாறி மக்கள் நடக்க முடியாத நிலையிலிருந்தது. அந்தத் தெருவை சுத்தம் செய்து ரோடு போட்டுத் தருமாறு வானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.
தற்போது அதற்கான நிதி எங்களிடம் இல்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் அனுப்பினார். இதையடுத்து சந்திரசேகரன், ஈஸ்வரன் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு எவ்வளவு நிதி செலவாகும் அதற்கான முழு தொகையை தானே முன்வந்து தருவதாக கூறி ஒன்றிய அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கேட்டு மனு அனுப்பினார்.
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க சந்திரசேகருக்கு அனுமதி கடிதம் கிடைத்தது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வழிகாட்டுதல் படி சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் தனது சொந்த பணத்தை செலவு செய்து சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார் இளைஞர் சந்திரசேகர். இந்த பணியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.