போலீசாரின் பிடியிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் திடீரென கை, கால்கள் உடைந்த நிலையில் மாவுக் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரியில் கஞ்சா விற்க முயன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் காலில் மாவுக் கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சம்பவம் நிகழந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் சூர்யா. இவர் அண்மையில் கல்லூரி பகுதிக்கே சென்று மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூர்யாவை பிடிக்க முற்பட்டனர். அப்போது பிடிபட்ட சூர்யாவிடம் இருந்து ஒன்றை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக போலீசாரை கண்டவுடன் சூர்யா தப்பித்து ஓட முயன்ற நிலையில் பள்ளம் ஒன்றில் தவறி கீழே விழுந்தார். அதில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவு காரணமாக அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று குற்றச் சம்பவங்களில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க முயலும் குற்றவாளிகள் கழிவறையில் வழுக்கி விழுந்து மாவுக் கட்டு போடப்பட்ட சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தந்தது.