நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதிக்கு அருகே உள்ளது குறிச்சிகுளம் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் வெள்ளியப்பன். 28 வயது நிரம்பிய இவர், மும்பையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தனது ஊரில் இருக்கும் இசக்கியம்மன் கோவிலில் கொடைவிழா என்பதால், வெள்ளியப்பன் மும்பையிலிருந்து கிளம்பி, தனது சொந்த ஊரான குறிச்சிகுளத்திற்கு வந்துள்ளார்.
கடந்த 25 ஆம் தேதியன்று, தாழையூத்திலிருந்து குறிச்சிகுளம் நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த வெள்ளியப்பனுக்கு, செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதனால், தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, வெள்ளியப்பன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று, வெள்ளியப்பனை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். இதில், படுகாயம் அடைந்த வெள்ளியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட வெள்ளியப்பனுக்கு சி.என்.கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம், அப்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே, வெள்ளியப்பனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத இருவரும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை இருவீட்டார் மத்தியில் பூதாகரமாக வெடித்தவுடன், வெள்ளியப்பன் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த பெண்ணின் கணவரும் உறவினர்களும், வெள்ளியப்பன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், தனது சொந்த ஊரான குறிச்சிகுளம் கோயில் திருவிழாவுக்காக வெள்ளியப்பனும் அந்தப் பெண்ணும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளனர்.
இதையறிந்த பெண் குடும்பத்தார், வெள்ளியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அப்போது, குறிச்சிகுளம் சாலையில் சென்றுகொண்டிருந்த வெள்ளியப்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் பெண்ணின் தந்தையான மூக்கன், மணிகண்டன், நாகராஜன், தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அது தவிர இச்சம்பவத்தில், பெண்ணின் கணவர் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், நெல்லை மக்களை பரபரப்பாகி உள்ளது.