ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை மாலை ஒரு இளைஞர் பெட்ரோல் கேனுடன் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு இந்த தமிழ்நாட்டில் நியாயமே கிடைக்கவில்லை, அதிகாரிகள் பணக்காரர்களுக்கு உதவியாளர்களாகவே இருக்கிறார்கள், எங்கு சென்று மனு கொடுத்தாளும் எந்த நடவடிக்கையும் இல்லை என்னால் இனிமேல் வாழவே முடியாது என்று திடீரென தான் வைத்திருந்த அந்த கேனை எடுத்து திறந்து தலையில் ஊற்றினார்.
அப்போதுதான் அது பெட்ரோல் கேன் என தெரியவந்தது. அந்த பரபரப்பான நிமிடங்களில் அங்கிருந்த மக்கள் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள். என்ன பிரச்சனை என கேட்டபோதுதான், அந்தியூரைச் சேர்ந்தவன் என்றும் ஜெயபிரகாஷ் எனது பெயர் என்றும் கூறினார்.
தனக்கு குடும்ப கஷ்டத்திற்காக ஐந்து லட்சம் ரூபாய் பைனான்ஸில் கடன் வாங்கியது உண்மை. ஆனால் கடன் வாங்கிய பைனான்ஸ் நிறுவனம் இப்போது என்னிடம் 25 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் கந்துவட்டியை ஒழிக்க சட்டம் உள்ளதாக அரசு கூறுகிறது. நான் கந்துவட்டிக்கு பணம் வாங்கவே இல்லை. ஆனால் என்னை கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு தினசரியும் மிரட்டுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் மனு கொடுத்து பார்த்துவிட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நான் இறந்து விடலாம் என இன்று தற்கொலை செய்ய முடிவு செய்து விட்டேன் என்றார். உடனே அப்பகுதி போலீசார் அங்கு வந்து அவரை கைது செய்து கூட்டிச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகுந்த பரபரப்பை கண்டது.