சென்னையில் நடைபெறும் 42 ஆவது புத்தகத் திருவிழாவில் நக்கீரன் நூல் அரங்கில் திருவள்ளுவர் தினத்தன்று மாலை, கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய ’நிலவுக் கிண்ணத்தில் மது’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. இவ்விழாவிலேயே அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் இரு நூல்களும் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டன.
நக்கீரன் பொதுமேலாளரான சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்க, கலைவிமர்சகர் இந்திரன் முன்னிலை வகிக்க, கவிஞர் ஜெயபாஸ்கரன் நிகழ்சிக்குத் தலைமை தாங்கினார்.
ஆரூர் தமிழ்நாடனால் தொகுக்கப்பட்ட கவிக்கோ அப்துல்ரகுமானின் இறுதிக் காலக் கவிதைகள் அடங்கிய ‘இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது’, பிரபஞ்சன் எழுதிய ’மனு அதர்மம்’ , ’கழுதைக்கு அஞ்சுகால்’ ஆகிய மூன்று நூல்களையும் கவிவேந்தர் மு.மேத்தா வெளியிட்டார். அவற்றை வானம்பாடிக் கவிஞர் சிற்பி பெற்றுக்கொண்டார்.
இவற்றில் பிரபஞ்சனின் இரண்டு நூல்களும், நக்கீரனில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்களாக வெளிவந்து வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற படைப்புகளாகும். இவற்றை கவிஞர் ஜலாலுதீன் வெளியிட முனைவர் ஆதிரா முல்லை பெற்றுக்கொண்டார்.
தலைமையுரை ஆற்றிய கவிஞர் ஜெயபாஸ்கரன் ‘மறைந்த எழுத்தாளர்கள், தங்கள் எழுத்துக்களால் வாழ்கிறார்கள். அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த நூல்களை நக்கீரன் வெளியிடுவது பெருமைக்குரியது. அதிலும் கவிக்கோ அப்துல்ரகுமானோடு நெருங்கிப் பழகிய நண்பர்கள் முன்னிலையில், அவருடைய கவிதை நூல் வெளியிடப்படுவது தற்செயலாக அமைந்த பெரும் வாய்ப்பாகும்’ என்றார் நெகிழ்ச்சியாய்.
நூல்களை வெளியிட்டுப் பேசிய மு.மேத்தா ‘மறைந்தாலும் எழுத்தாளன் அவன் எழுத்துக்களால் வாழ்கிறான். கவிக்கோ அவர்கள் இறுதி நாட்களில் எழுதிய கவிதைகள், நூல்வடிவம் பெறுவது மகிழ்வைத் தருகிறது. அந்தஅந்த வேலையை நக்கீரன் செய்வது பெருமைக்குரியது என்றார் பெருமிதமாக.
வானம்பாடிக் கவிஞர் சிற்பியோ ‘கவிக்கோ அப்துரகுமானின் நினைவுகள் என் மனதிலே வந்து என்னை நெகிழவைக்கின்றன. அவர் காதலிலும் தத்துவத்திலும் கொடிகட்டிப் பறந்தார். அவரது எந்தக்கவிதையை எடுத்தாலும் அதில் இந்த இரண்டு கூறுகளும் இருக்கும். அவருடன் பழகிய நாட்கள் மனதில் நின்று நிலைத்த நினைவுகளாகும். அவர் மறைந்த பிறகும், அவரது கவிதைகளைத் தேடிப் பிடித்துத் தொகுத்துத் தந்திருக்கும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடனைப் பாராட்டுகிறேன். இன்று சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரே பத்திரிகை நக்கீரன்தான். மிகவும் நெஞ்சுரம் கொண்ட தைரியமான பத்திரிகை என்றாலும் அது நக்கீரன்தான். இன்று கருத்துரிமைக்காக நக்கீரன் தொடர்ந்து குரல்கொடுத்துக் கொண்டிருப்ப்பதைப் பார்க்கிறோம். கருத்துரிமையின் அடையாளமாகத் திகழும் நக்கீரன், தமிழ்க் கவிதையின் அடையாளமாகத் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை நூலை வெளியிடுவது மிகுந்த பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உரியது’ என்றார் அழுத்தமாய்.
நன்றியுரை ஆற்றிய ஆரூர் தமிழ்நாடன் ‘கவிக்கோ அவர்களின் கடைசிக் காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றதை என் வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன். அவரை கடைசியாக கவிஞர்கள் ஜலாலுதீன், ஜெயபாஸ்கரன் ஆகியோரோடு மருத்துவமனையில் பார்த்தபோது, எங்களை புன்னகையோடு வரவேற்றார். அவரிடம் ஜெயபாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு நீங்கள்தான் தலைமை தாங்கவேண்டும். நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அழைத்தேன். அந்த ஆசை பொய்த்துவிட்டது. அவர் பதில் சொல்லாமல் புன்னகைத்தார். அவர் தன் மரணத்தை உணர்ந்து வைத்திருக்கிறார் என்ற உண்மை பின்னர்தான் புரிந்தது. அவர் இல்லாத நிலையில் அவருடைய கவிதைநூல் வெளியாகிற இந்த நிகழ்சியில், அவருடைய நெஞ்சுக்கு நெருக்க்கமானவர்கள் பலரும் கலந்துகொண்டிருப்பது மகிழ்சிக்குரியதாகும். கவிக்கோவின் இன்னொரு தத்துவக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு நக்கீரனில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அது விரைவில் வெளிவரும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என்றார். இந்த நிகழ்ச்சியில், இலக்கிய ஆளுமைகளான பிருந்தாசாரதி, முனைவர் ஆதிரா முல்லை, ஃபைஸ் காதிரி, உஸ்மான், கவிஞர் மீனா சுந்தர், இலக்கியன், லக்சு, சூர்யா, கவிக்குழல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மகிழ்வும் நெகிழ்வும் கலந்த கலவை நிகழ்ச்சியாய் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.