குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால் அதை காட்டிக் கொடுப்பது சிசிடிவி கேமரா தான். ஆனால், அந்த சிசிடிவி கேமராக்களையே திருடிய திருடர்கள், அதில் மூலமாகவே சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை வேளச்சேரி காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் லிங்கபெருமாள். இவர், அதே பகுதியில் தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதன் தலைமை அலுவலகத்திற்கு, இருசக்கர வாகனம் மூலம் மூன்று மர்ம நபர்கள் வந்துள்ளனர்.அப்போது, ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து, பாதுகாப்பிற்காக பொருத்தியிருந்த மூன்று சிசிடிவி கேமராக்களை திருடிச் சென்றனர். ஆனால், கேமராவை திருடும் காட்சிகளும், அங்குள்ள சிசிடிவியில் நன்றாக பதிவாகியுள்ளது.
அதன்பிறகு, அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்த லிங்கபெருமாள், வழக்கம் போல் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது, சிசிடிவி கேமராக்கள் திருடுபோவதை பார்த்து அதிர்ச்சியடைந்த லிங்கபெருமாள், அந்த விடீயோக்களை எடுத்துக்கொண்டு வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டை சேர்ந்த தயாளன் என்பவரை கைது செய்தனர்.
தயாளனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் நண்பர்களோடு சேர்ந்து சிசிடிவி கேமராவை திருடிச் சென்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், தற்போது தலைமறைவாக இருந்துவந்த அவரது நண்பர்களான ஆகாஷ், விக்னேஷ்வரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சிசிடிவி கேமராக்களை திருடும் மர்மநபர்களின் அதே சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சோசியல் மீடியாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.