தர்மபுரி அருகே, குடிபோதையில் வாலிபரை சரமாரியாக அடித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை ஏரியில் வீசிச்சென்ற வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள நல்லம்பள்ளியை அடுத்த எர்ரப்பட்டியைச் சேர்ந்தவர் மாது மகன் தேவன் (30). கட்டடத் தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நிர்வாண நிலையில் தேவனின் சடலம் மிதப்பது தெரிய வந்தது. தொப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சடலத்தை, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் கைப்பற்றப்பட்ட பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், 7 பேர் கும்பல் தேவனை சரமாரியாக அடித்துக் கொன்று, சடலத்தை ஏரியில் வீசிவிட்டுச் சென்றது தெரிய வந்தது.
கொலையாளிகளைத் தேடி காவல்துறை தனிப்படை நாலாபுறமும் விரைந்தது. தேவன் கொலை வழக்கு தொடர்பாக, எர்ரப்பட்டியைச் சேர்ந்த பிரபு (31), கெட்டுப்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் (24), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆதி என்கிற நடராஜ் (19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில், கொலையுண்ட தேவனும், அவருடைய நண்பன் ரஞ்சித் என்பவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது நண்பனின் செல்போனை தேவன் எடுத்துச் சென்று விட்டார். அதன்பிறகு அவர்கள் இருவரும் ஏனோ சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அவர்கள் மது அருந்த முடிவு செய்தனர். அப்போது ரஞ்சித் தனது 6 நண்பர்களையும் மது விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைத்ததன்பேரில் அவர்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டியில் ஒன்றாக மது குடித்துள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ரஞ்சித், ஓராண்டுக்கு முன்பு எடுத்துச்சென்ற தனது செல்போனை திருப்பித் தரும்படி தேவனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ரஞ்சித் மற்றும் அவருடைய 6 நண்பர்களும் சேர்ந்து தேவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த தேவன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள், சடலத்தை ஏரியில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது.
இந்தக் கொலையில் மூளையாக செயல்பட்ட ரஞ்சித் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஓராண்டுக்கு முன்பு எடுத்துச்சென்ற செல்போனுக்காகதான் இந்தக் கொலை நடந்ததா? அல்லது பெண் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ரஞ்சித் பிடிபட்டால் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.