விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலை மற்றும் உடலின் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் பிணமாகக் கிடந்துள்ளார். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக டவுன் டி.எஸ்.பி. பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் இறந்தவர் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் ராஜன்(22) என்பதும், இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. கல்லூரி விடுமுறை நாட்களில் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர்தான் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராஜன், 16 வயது சிறுமியை காதலித்து வந்ததுள்ளார். அந்த காதல் பற்றிய விவரம் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் ராஜனை அழைத்துக் கண்டித்துள்ளனர். இருப்பினும், ராஜன் அதைப் பொருட்படுத்தாமல் தன் காதலைத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் தான் ராஜன் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.
நேற்று முன்தினம் ராஜன் மற்றும் அவரது நண்பரான சத்தியராஜ் ஆகிய இருவரும் மது குடிக்கச் சென்றுள்ளனர். இவர்களுடன் சத்தியராஜின் நண்பரான விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்கும் மது அருந்த வந்துள்ளார். மது போதை ஏறியதும் சத்தியராஜ் ராஜனிடம், “நீ காதலிப்பதாகக் கூறும் பெண் என்னுடைய உறவினர். அதனால் உன் காதலை நீ கைவிட வேண்டும்” என்று கண்டித்துக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் சத்தியராஜ், ராஜன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சத்தியராஜும் கார்த்திக்கும் சேர்ந்து அருகில் கிடந்த கல்லை எடுத்து ராஜனை அடித்துக் கொலை செய்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உடனடியாக சத்தியராஜ், லாலி கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி ரவீந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.