உடற்பயிற்சிக் கூடத்தில் அதிக எடையைத் தூக்கி பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான விஷ்ணு என்ற இளைஞர் மூன்று ஆண்டுகளாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். உடற்பயிற்சிக் கூடத்தில் 100 கிலோவுக்கு மேல் எடைத் தூக்கும் பயிற்சியின் போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இளைஞரின் மரணம், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.
இந்த சூழலில் ஒவ்வொரு வரும் தங்கள் வயதிற்கு ஏற்ற எடைத் தூக்கும் பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், உடல் ஊக்கத்திற்கான ஊசி மற்றும் பவுடர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
உடல்நல பாதிப்பு இருப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி மேற்கொண்டால், பாதிப்புகள் ஏற்படாது என்று உடற்பயிற்சி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நோயற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது, எனினும் முறையான உணவுப் பழக்கத்துடன் உடல் பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது.