கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கச்சராபாளையம் பஸ் நிலையம் அருகில் அரிசி மற்றும் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கொளஞ்சியின் கடைக்கு வந்துள்ளார். அவர் கொளஞ்சியிடம் தங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்க உள்ளது அதற்கு சுமார் ரூ.20,000 மதிப்பில் மளிகை பொருட்களும், அரிசி மூட்டைகளும் வேண்டும் என்று வாங்குவதற்கான பொருட்களின் விபரப் பட்டியலையும் கொடுத்துள்ளார். இன்று பெரிய வியாபாரம் கிடைத்திருக்கு என்ற மகிழ்ச்சியில் மளமளவென அந்த இளைஞர் கொடுத்த பட்டியலில் உள்ள மளிகை பொருட்களைச் சேகரித்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டினார். அதோடு அந்த இளைஞர் சமையலுக்குத் தேவையான 3 அரிசி மூட்டைகளையும் எடுத்து வைத்தார். முதலில் சமைப்பதற்கு அரிசி தேவைப்படுகிறது. அதனால் இந்த மூன்று மூட்டை அரிசிகளையும் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பணத்துடன் வருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்படி மூன்று மூட்டை அரிசியையும் அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு பணத்தோடு இளைஞர் வருவார் என்று கொளஞ்சி காத்திருந்தார். ஆனால் நேரம் போனதே தவிர அந்த இளைஞர் வரவில்லை. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட கொளஞ்சி, வேதனையில் இருந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சி தனது ஊரான மாதவச்சேரியிலிருந்து கடையைத் திறப்பதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்று ஏமாற்றிய இளைஞர் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். சுதாரித்துக் கொண்ட கொளஞ்சி தனது இருசக்கர வாகனத்தைக் குறுக்கே நிறுத்தி அந்த இளைஞரை வழிமறித்து அவ்வழியாக சென்றவர்களின் உதவியோடு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கச்சராபாளையம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் விசாரணை நடந்திய போலீசார், கொளஞ்சியைப் போன்று அதே பகுதியில் உள்ள இன்னொரு அரிசிக் கடை உரிமையாளர் திருமலை என்பவரிடம் அரிசி மூட்டைகளை ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும், இளைஞரிடம் விசாரித்ததில் இதுபோன்று சிலரிடம் அரிசி மூட்டைகளை ஏமாற்றி திருடி இருப்பதாகப் பட்டியல் போட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திரைப்படங்களில் நகைச்சுவையில் கலக்கும் நடிகர் வடிவேலு ஒரு படத்தில், முதலாளி 250 மூட்டை அரிசி தேவைப்படுகிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மூட்டையிலும் சாம்பிள் அரிசி வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு கடைக்காரரை ஏமாற்றிச் செல்வது போல் அமைந்திருக்கும். மற்றுமொரு காமெடியில் என் மனைவி அரிசி வாங்கிட்டு வரச் சொன்னாள் ஆனால் அரிசி பெயரை மறந்துட்டேன். ஒவ்வொரு அரிசியா எடுங்க நான் சாப்பிட்டு பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி, கடைக்காரரை ஏமாற்றி தராசு படிக்கற்களை திருடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதே பாணியில் கச்சராபாளையம் பகுதியில் ஒரு இளைஞர் கடைக்காரர்களிடம் மூட்டை மூட்டையாக அரிசியை ஆட்டையைப் போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.