
பெண்ணுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த இளைஞர் ஒருவர் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ளது அக்கலாம்பட்டி கிராமம். அங்கு வசித்து வந்த சீனு என்று 23 வயது இளைஞர் படிப்பை முடித்துவிட்டு இந்தியன் ஏர்போர்ஸ் பணியில் சேர காத்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரின் மனைவி மீனா என்பவருடன் சீனு திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சத்யாவிற்கும் சீனுவுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்து வந்தன.
இந்நிலையில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற 20 வயது இளைஞர் தனது தாய்மாமா சத்யாவின் மனைவி மீனாவிடம் சீனு திருமணம் மீறிய உறவில் இருந்ததன் காரணமாக ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சீனு வீட்டின் வெளிப்புறத்தில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அக்கலாம்பட்டிக்கு வந்த பிரவீன்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனுவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சீனு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்த வேலகவுண்டன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட சீனுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீனை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட சீனு இன்று காலை கோவை இந்தியன் ஏர்போர்ஸில் பணிக்கு சேர வேண்டும் என பணி ஆணை பெற்றிருந்தார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.