பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி சீரழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நம்மிடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் பாமகவின் முன்னாள் இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி ப்ரியா.
''இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பிறகு தூக்கம் வரவில்லை. வீடியோவில் அந்த குரலை கேட்கும்போது யார் வீட்டு பொண்ணோ என்று நினைக்கத்தோன்றவில்லை. நம்ம வீட்டு குழந்தையா என்று அழுகை வருகிறது. எவ்வளவு உறுதியாக இருந்தாலும் இதனை பார்க்கக்கூடிய மனநிலை இல்லை. மனது பதட்டமாக இருக்கிறது.
ஏன் காவல்துறை இவ்வளவு கோழைத்தனமாக இருக்கிறது என்று தெரியவில்லை. காவல்துறை அரசாங்கத்தின் கைக்குள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யார் குற்றவாளி என்று சொல்ல தயங்குகிறார்கள் என்றால், அவர்களுக்கு என்ன விதமான தடை இருக்கிறது? காவல்துறை இந்த விசயத்தை எப்படி கையாள்கிறது என்பது முக்கியம். அவர்கள் வீட்டிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கை கட்டி, வாய் பொத்தி நிற்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. அப்படி நின்றால் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு? யாராவது அரசியல்வாதி பின்புலம் இருக்கிறது என்றால் அதனை வெளியில் சொல்ல தகுதியான ஒரு காவல்துறை அதிகாரி இல்லை என்பதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.
இதில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்று ஒரு காவல்துறை அதிகாரி சொல்கிறார். ஏன் இப்படி சொல்கிறார்?. புகார் கொடுத்தவர்களையும் மிரட்டியிருக்கிறார்கள். குற்றங்கள் செய்வதற்குத்தான் அரசியல்வாதிகள் என்பதுபோல் ஆகிவிட்டது. பெரிய குற்றங்களில் உள்ளவர்கள் அரசியல்வாதிகள் என்பதுபோல் ஆகிவிட்டது.
இந்த விசயத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் அதிகபட்சம் ஒருவாரம்தான். இந்த வழக்கில் ஒரு வாரத்திற்கும் மேலாக விசாரணை நடத்துவற்கு அங்கு ஒன்றுமே இல்லை. வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. செல்போனில் யாருக்கு பேசினார்கள் என்பதை சேகரிக்க முடியும். தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் ஒரு வாரத்தில் கொடுத்தால்தான் உண்டு. ஆனால் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதாக சொல்கிறார்கள்.
குண்டர் சட்டத்தை இரண்டு வகையில் பயன்படுத்துகிறார்கள். அரசை எதிர்ப்பவர்களை தவறாக சுட்டிக்காட்டி குண்டர் சட்டம் போடுகிறார்கள். அரசாங்கத்திற்கு நெருக்கமாக உள்ளவர்களை பாதுகாக்கவும் குண்டர் சட்ட்த்தை பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் சம்மந்தப்பட்டவர்களை வெளியே விட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்களை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளார்கள். பொள்ளாச்சி விசயத்தில் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இவ்வளவு தூரம் தவறு செய்பவர்களுக்கு இந்த அவப்பெயர் ஒரு பெரிய விஷயமாக இருக்காது. கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால்தானே அவப்பெயரை பெரியதாக எடுத்துக்கொள்ள முடியும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அந்த தண்டனை இனி இதுபோன்ற தவறுகள் செய்யக்கூடாது என்ற பயத்தை கொண்டுவர வேண்டும்.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரிகளில் மாணவிகள் போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது. இதுவரை யாருக்காவது இதேபோல் ஒன்று நடந்தது என்றால், நமக்கென்ன என்று போய்க்கொண்டிருந்தார்கள். சமூக வலைதளங்களால் ஏற்படும் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. நன்மைகளில் இதுவும் ஒன்று. சமூக வலைதளம் இல்லையென்றால் இந்த நிகழ்வு பெரியதாக வெளியில் தெரிந்திருக்காது. மூடி மறைக்கப்பட்டிருக்கும்.
பெற்றவர்கள்தான் முதல் தோழமை
பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ பெற்றவர்கள்தான் முதல் தோழமையாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் தனது தாயாரிடம், தகப்பனாரிடம் குழந்தைகள் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் இளம் பருவத்தை கடந்துதான் வந்திருக்கிறார்கள். நம்ம குழந்தைகள், நம்ம பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்களைத் தவிர வேறு யார் நினைக்கப்போகிறார்கள்?. பெற்றோர்களும் பெண் குழந்தைகளிடம் நல்ல முறையில் பாசமாக, நட்பு ரீதியாக நெருக்கமாக பழக வேண்டும். அரியாத வயது, டீன் ஏஜை கடக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் தவறு என்று நான் சொல்லவில்லை. காதல் வந்தால்கூட பெற்றோரிடம் அதனை தெரிவித்து அவர்களுடைய அறிவுரைகளை கேட்கலாம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம். ஆண் குழந்தைகளையும் நன்றாக வளர்க்க வேண்டியது மிக முக்கியம். ஒரு பெண்ணை போற்றுவதில்தான் ஆண்மையின் அளவு அளவிடப்படுகிறது என்பதை சொல்லி வளர்க்க வேண்டும்''.