புதுச்சேரியில் இன்று (04.11.2020) காவலர் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் காவலர் தேர்வில் முறைகேடு இருப்பதாகாக கூறி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேர்வினை நிறுத்த உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை கண்டிக்கும் வகையிலும், காவலர் தேர்வை திட்டமிட்ட படி நடத்த வலியுறுத்தியும், புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பக்கோரியும், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தக்கோரியும் துணை நிலை ஆளுநர் மாளிகையை 03.11.2020 அன்று முற்றுகையிட போவதாக அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காமராஜர் சதுக்கத்திலிருந்து நேரு வீதி வழியாக சென்றனர். அங்குள்ள காவல் நிலையம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் முன்னேறுவதை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரம் அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அனைவரையும் போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர்.