திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்புமனுக்களையும், வாக்காளர் பட்டியலையும் கிழித்து வீசப்பட்டிருக்கும் சம்பவம் திருவாரூர் மாவட்ட தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழகத்தில் கிராமபுற ஊராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலை வருகிற 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டமாக நடத்துவதாக அறிவித்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல்கட்சிகள், கூட்டணிகட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இழுபறி ஒருபுறம் இருக்க, இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை திங்கள் கிழமையோடு முடிவடைய உள்ளது.
இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் வடகண்டம் ஊராட்சியில் நேற்று சனிக்கிழமை வரை 27 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று ஞாயிற்றுகிழமை காலை வட கண்ட ஊராட்சி செயலாளர் கணபதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்தபொழுது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டும், மனுக்கள் கிழிக்கப்பட்டு வாசல் அருகில் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது பெறப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் கிழிக்கப்பட்ட கழிவறையில் வீசப்பட்டிருப்பதையும், அதற்காக பெறப்பட்ட விண்ணப்ப கட்டணமான 1500 ரூபாயும் திருடப்பட்டிருப்பதையும் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனடியாக இதுகுறித்து, தலமை அதிகாரிகளுக்கு கூறிவிட்டு குடவாசல் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பணத்திற்காக நடந்ததா, அல்லது தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடைபெற்றுள்ளதா என்பன உள்ளிட்ட கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தோம்," எங்கும் இல்லாத வகையில் அதிகமானோர் வார்டு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்குள் இருக்கும் ஈகோவே இந்த வேலையை செய்ய வைத்திருக்கிறது. மனுக்கள் முழுவதையும் கிழித்து விட்டனர். ஆனாலும் விவகாரம் வேறுவிதமாக மாறிவிடும் என்பதால் மனு கொடுத்தவர்களிடமே திரும்ப மனு வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர், அதோடு வேட்பாளர் பட்டியல் மட்டும் கிழித்துவிட்டதாக கூறுகின்றனர்.