தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் பாதிப்பு பகுதிகளை இரண்டாவது நாளாக நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று கோடம்பாக்கம் பகுதியில் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "அதிமுக ஆட்சியில் இருந்ததை போல் அதிகாரிகள் தற்போது இல்லை, முதல்வரே களத்தில் இறங்கி வேலை செய்கிறார். முந்தைய அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் 10 நாட்கள் கூட உணவில்லாமல் மழையில் அவதிப்பட்டனர். ஹெலிகாப்டரில் இருந்து உணவுப்பொருட்கள் தூக்கி ஏறிந்த நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் தற்போது மீட்பு நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது" என்றார்.