சேலம் அருகே, ரவுடியை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் வீராணம் தேவாங்கர் காலனியைச் சேர்ந்தவர் பிரபு (38). ரவுடி. இவர் மீது கொலை உள்பட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் காவல்துறை விசாரணையில் உள்ளது. இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து அவர் இன்னொருவரின் மனைவியுடன் நெருங்கிப் பழகி வந்த நிலையில், அவரை குழந்தைகளுடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண்ணின் கணவர் இறந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவுடி பிரபு, கடந்த ஜூன் 24 ஆம் தேதி பிணையில் விடுதலை ஆகி வெளியே வந்தார். உள்ளூரில் அடிக்கடி அடிதடி ரகளையில் ஈடுபட்டு வந்ததால், பிரபு மீது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அதிருப்தியுடன் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அதே நாளில், உள்ளூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மனைவியிடம் சென்று தனது அலைப்பேசி எண்ணை கொடுத்து, தன்னிடம் பேசுமாறு மிரட்டியுள்ளார். ஏற்கனவே கணவர் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மனம் நொந்து போன அந்தப் பெண், இதுகுறித்து கணவரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்ட ரவுடி பிரபுவின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவருடைய தாய் மாமா வெங்கடேசுடன் சேர்ந்து பிரபுவை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் பிரபு கீழே சரிந்து விழுந்தார். பின்னர் சுரேஷூம், அவருடைய தாய் மாமாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரபுவை மீட்ட காவல்துறையினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வீராணம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், வெங்கடேஷ் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் சுரேஷை ஜூன் 28 ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.