தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாஜி திருநாவுக்கரசர், சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் தொகுதி ஜோதிமணி எம்.பி கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில், சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேச்சு சலசலப்பை ஏற்டுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளால் தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அதனால், நம் கட்சியில் பலம் இல்லை என்று கூறவில்லை. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் விரும்பினார்கள். அதனால் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தமிழ்நாட்டில் ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருந்தது. தற்போது 3-வது இடத்தில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம். அதே நேரத்தில் நம் கட்சியை சில கட்சிகள் தொட்டுவிடும் நிலையில் உள்ளது. கட்சியில் எம்.பிகளை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சி வளர்ந்துவிட முடியாது. உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்எல்ஏகள் அதிக அளவில் இருந்தால் தான் கட்சி வளரும். வளர்க்க முடியும்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சி (திமுக) தற்போது ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும். தேர்தலில் நம்மை பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் தேர்தல் முடிந்ததும் விட்டுவிடுகிறார்கள். கூட்டணி கட்சிகள் நம்மை கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் சங்கடப்படுகிறார்கள். ஆனால், திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை, பிரச்சனைகளை பற்றி அறிந்து அவர்களுக்காக பேசி தங்கள் கட்சியின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.
அதேபோல, நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்தால்தான் மக்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள். மக்களிடம் மக்கள் மனதில் நாம் இடம்பிடிக்க வேண்டும். அதற்கு நாம் அடித்தட்டு மக்களின் மக்கள் பிரச்சினைகள், உரிமைகளுக்காக பேச வேண்டும். இளைஞர்கள் நம் கட்சியைவிட சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள். மக்களின் கவனத்தை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க இன்று பல கட்சிகள் வந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கான மாற்றம் வேண்டும்'' என்று பேசினார். இந்தப் பேச்சு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.