டிசம்பர் மாத தொடக்கத்தில் பெய்த மழை மற்றும் புயல், ஆந்திராவில் பெய்த மழை ஆகியவற்றால் பாலாற்றில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஓரளவு தண்ணீர் வந்து பாலாற்றின் குறுக்கே சில இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நடுப்பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான ராஜன். டிசம்பர் 23ஆம் தேதி பாலாற்றில் வரும் நீரைக் காணச் சென்றபோது, தடுப்பணையில் தவறிவிழுந்து தத்தளித்துள்ளார். இதனைப் பார்த்தவர்கள் கத்தி கூச்சல் போட்டுள்ளனர். உடனே சிலர் தண்ணீரில் குதித்து அவரை தேடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அவர் அகப்படவில்லை.
இதுகுறித்து வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரில் தவறிவிழுந்த இளைஞரைத் தேடத் துவங்கினர். 3 மணி நேரத்துக்குப் பின்னர் சடலமாக மீட்டனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பாலாற்றில் வரும் நீரை வேடிக்கை பார்க்கச் சென்று தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தவர்கள் இந்த மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்டோர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.