விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகில் உள்ள கீழ் சிவாலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி தங்கள் விவசாய நிலத்திற்கு சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் பக்கத்து நில உரிமையாளரான சம்பத் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூரப்பம் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(65), அவரது நண்பர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமலிங்கம்(68) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரையும் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். அப்போது சம்பத்தின் மகன் வெங்கடேசன்(36) என்பவரையும் காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர். போலீஸ் வாகனத்தில் ஏறிய வெங்கடேசன், தன்னையும் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி பயந்து, போலீஸ் வாகனம் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். போலீசார் வாகனத்தை நிறுத்தி அவரை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.
அங்கிருந்து தப்பி ஓடிய வெங்கடேசன், அப்பகுதியில் இருந்த ஒரு புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக சென்ற வெங்கடேசன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் போலீசார் இறங்கிச் சென்று அப்பகுதியில் சுற்றி தேடி பார்த்தனர். அப்போது வெங்கடேசன் ஒரு புளிய மரத்தில் தூக்கிட்டு சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வளத்தி காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தனர். அங்கிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.