சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் முக்கிய உடல் உறுப்புகள் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உறுப்புகள் தானம் அளித்த இளைஞரின் பெற்றோர், என் மகன் இறந்த பிறகும் பிறர் மூலம் உயிருடன் இருப்பான் என்று கண்ணீர் மல்கக் கூறினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் சுரேந்தர் (20). இவர், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி, அப்பகுதியில் நடந்த சாலை விபத்தில் சுரேந்தர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து சுரேந்தரின் பெற்றோர், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, சுரேந்தரின் உடலில் இருந்து இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், தோல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் ஆகிய உறுப்புகள் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டன.
உறுப்புகள், கெட்டுப்போகாமல் இருக்க குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பெட்டிகளில் வைக்கப்பட்டன. இருதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் சென்னைக்கும், மற்ற உடல் உறுப்புகள் கோவை மற்றும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை 11.45 மணிக்கு செல்லும் விமானத்தில் இருதயம் கொண்டு செல்லப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து காமலாபுரம் விமான நிலையம் 21 கி.மீ. தூரத்தில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போதிய ஏற்பாடுகள் காவல்துறை மூலம் செய்யப்பட்டது. அதையடுத்து உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் மின்னல் வேகத்தில் கிளம்பியது. சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து காலை 11.11 மணிக்கு இருதயம், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம், 19 நிமிடத்தில் காமலாபுரம் விமான நிலையத்தை அடைந்தது.
பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) தமிழக ஆளுநர் சேலம் வந்திருந்தார். அவரும், நேற்று (10/02/2020) காலை காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் விமானத்தில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சேலத்தில் இருந்து அவர் கார் மூலம் விமான நிலையம் சென்றார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் விமான நிலையத்தை அடைய வேண்டும் என்பதற்காக உடல் உறுப்புகளுடன் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், ஆளுநரின் காரையும் முந்திச்சென்றது. மேலும், சென்னை செல்ல இருந்த பயணிகளும் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்துவிடுமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து உடல் உறுப்புகளை ஏற்றிக்கொண்டு, காலை 11.40 மணிக்கு ட்ரூஜெட் விமானம் புறப்பட்டது. சென்னையை 12.40 மணிக்கு அடைந்தது.
உடல் உறுப்புகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஏற்கனவே, சுரேந்தரின் இருதயம், நுரையீரலை பொருத்த ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடாகி இருந்தது. இதையடுத்து சரியான நேரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவ்விரு உடல் உறுப்புகளும், சிகிச்சையில் இருந்த நபருக்கு பொருத்தப்பட்டது.
அதேபோல் சுரேந்தரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. தோல் மற்றும் எலும்புகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சுரேந்தரின் பெற்றோர் கூறுகையில், ''சாலை விபத்தில் காயம் அடைந்த என் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், அவன் உயிர் பிழைக்க மாட்டான் என்று சொல்லிவிட்டனர். அதனால் எங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். எங்கள் முடிவை மருத்துவர்களிடம் கூறினோம். அவர்களும் நல்ல படியாக எங்கள் மகனின் உடலில் இருந்து பிறருக்கு பயன்படக்கூடிய உடல் உறுப்புகளை எடுத்தனர். இதன்மூலம் எங்கள் மகன் பிறர் மூலம் உயிருடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான் என நம்புகிறோம்,'' என கண்ணீருடன் கூறினர்.