சென்னை போரூரைச் சேர்ந்த ஷோபனா(22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் அரீஷ் (17) முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், ஷோபனா தனது சகோதரரை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்று ஷோபனாவின் இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. அதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில், பின்னால் வந்த மணல் லாரி ஷோபனாவின் மீது ஏறி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் அரீஷ் காயங்களுடன் உயிர்தப்பினார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மதுரவாயல் சாலை குண்டும் குழியுமாக இருப்பதும் இந்த விபத்திற்கு ஒரு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் லாரி ஓட்டுநர் மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.