
சென்னை ஆயிரம் விளக்கு அண்ணாசாலை அருகே ஒரு பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது உட்புறமாக இருந்துகொண்டு அந்த கட்டடத்தை இடிக்கும் போது வெளிப்புறமாக இருந்த சுவர் இடிந்து விழுந்தது.
அப்போது அந்த வழியாக நடைபாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது சுவர் இடித்து விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருந்த இரு பெண்களையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் ப்ரியா என்பவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் கட்டடம் இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடம் இடிக்கும்போது உரியப் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.