காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த குருவிமலை பகுதியில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த இரு கடவுளுக்கும் கடந்த 12 ஆண்டுகளாக கிராம மக்கள் ஆடி மாதத் திருவிழா நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இன்று (09-08-24) ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலயத்தில் வளைகாப்பு வைபோக விழா நடைபெற இருந்தது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பேனர்கள் வைத்து கிராமத்தை அலங்கரித்து வந்தனர். இதில் சில இளைஞர்கள், வித்தியாசமான முறையில் பேனர்களை வைத்து கிராம மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த கோவில் திருவிழாவிற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் ஒன்றில், ஆதார் கார்டு வடிவில் இளைஞர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த பேனரில், பிரபல ஆபாச நடிகையான மியா கலிபாவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குறிப்பாக, அந்த பேனரில் இடம்பெற்றிருந்த அம்மன் புகைப்படத்தின் பக்கத்தில் ஆபாச நடிகை மியா கலிபா பால்குடம் தூக்குவது போல் சித்தரித்து வைத்திருந்தது ஒருசிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா சார்ந்த பேனரில் அம்மன் புகைப்படத்திற்கு அருகில் ஆபாச நடிகை புகைப்படம் இடம்பெறுவதா? என எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து சென்ற போலீசார், சர்ச்சைக்குரிய அந்த பேனரை அகற்றினர். மேலும், பேனர் வைத்த இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருவிழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் ஆபாச நடிகையின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.