நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை நிலை நிறுத்துவதற்காக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளது தமிழகத் தேர்தல் ஆணையம். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், தேர்தலை மையப்படுத்தி சமூக கண்ணோட்டத்தில் விளம்பரம் செய்து வரும் இளைஞர் ஒருவரின் முயற்சியை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதாவது, 'ட்வெண்டி ஒன் புரடொக்சன்' எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பரத் கிஷோர். இளைஞரான இவர், 'மாற்றத்தின் சக்தி உங்கள் கையில்' என்கிற தலைப்பில், பொறுப்பான வாக்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒரு விளம்பரப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக் கிறார். படவா கோபி, ராகுல் தாத்தா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இந்த விளம்பர படத்தினை பரத் கிஷோர், ராஜ் ஈஸ்வர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த விளம்பரப்படம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த தமிழக தேர்தல் ஆணையம், தங்கள் ஆணையத்தின் மூலம் இதனை மக்களிடம் கொண்டு செல்ல பரத் கிஷோரிடம் பேசியது. இந்தப் பேச்சு வார்த்தையில் தேர்தல் ஆணையத்திற்காக அந்த விழிப்புணர்வு விளம்பரத்தை கொடுக்க பரத்கிஷோர் சம்மதிக்க, அவரிடமிருந்து படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். பரத் கிஷோரின் அந்த விளம்பரம் தான் பேனர்களாகவும், சினிமா தியேட்டர்களில் படமாகவும், சோசியல் மீடியாக்களிலும் ரிலீஸாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மக்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர் பரத் கிஷோர் எடுத்த முயற்சியை தேர்தல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். பரத் கிஷோரின் ட்வெண்டி ஒன் புரடொக்ஷனின் வாடிக்கையாளர்களாக டி.வி.எஸ். குரூப், சுந்தரம் ஃபைனான்ஸ், ஜி-ஸ்கொயர், காசாகிராண்ட் , முருகன் இட்லி உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.