
"சொன்னா கேளுங்க.. நா வேற மாதிரி ஆளு... ஒழுங்கா எல்லாரும் போயிடுங்க.. இல்லைனா அவ்ளோதான்" என நீதிமன்றத்திற்குள் புகுந்து போலீசாரை மிரட்டும் இளைஞரின் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அபிலேஷ். 25 வயதான இவர் மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அபிலேஷ், அது தொடர்பான வழக்கு ஒன்றில் கைதாகி, சமீபத்தில் தான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும், அந்த கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்த வழக்கு தொடர்பாக கையெழுத்து போடுவதற்காக, அபிலேஷ் தன்னுடைய வக்கீலுடன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, வழக்கு வாய்தாவுக்காக வந்த அபிலேஷ் கஞ்சா போதையில் அங்கும் இங்குமாய் தள்ளாடிக் கொண்டே இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, தலைக்கேறிய போதையால் நீதிபதி அறை முன்பு நின்றுகொண்டு பல்வேறு சேட்டைகளை செய்துள்ளார். தனது சட்டையை ஒருபக்கம் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக நடந்து செல்வது, அதன்பிறகு போதையில் தடுமாறி கீழே விழுவது என ஏகப்பட்ட அலப்பறைகளை செய்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள், அந்த இளைஞரை கண்டித்துள்ளனர். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாத அபிலேஷ், "சொன்னா கேளுங்க.. நா வேற மாதிரி ஆளு.. ஒழுங்கா எல்லாரும் போயிடுங்க.. இல்லைனா அவ்ளோதான்" என போலீசாருக்கே வார்னிங் கொடுத்தார். அதன்பிறகு, அந்த இளைஞரை கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், பந்தய சாலை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அபிலேஷை பிடிக்கும்போது அவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓட முயற்சித்துள்ளார். ஆனாலும் விடாத போலீசார் அவரை கையும் களவுமாக லாக் செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், நீதிமன்றத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் போலீசாரையே மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.