அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவர் குடும்ப வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து வருகிறார். இதன்படி தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவார். காலை முதல் மாலை வரை ஆடுகள் காடுகளில் மேய்ந்துவிட்டு மாலை ஆடுகள் தானாகவே வீடு வந்து சேரும். இப்படி தினசரி ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம். சமீப நாட்களாக மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடுகள் திடீர் திடீரென்று காணாமல் போயுள்ளது.
சந்தேகம் அடைந்த கோவிந்தராசு ஆடு மேய்ச்சலுக்கு போகும்போது உடன் சென்று கண்காணித்து பார்த்தும் ஆடு திருடர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு காணாமல் போன ஆடுகளை தேடி சென்று விசாரித்துள்ளார். அவரது ஆடு தப்பித்தவறி கூட தங்கள் ஊர் பக்கம் வரவில்லை உங்கள் ஆட்டைக் யாரோ நோட்டமிட்டு திருடி செல்கிறார்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து கோவிந்தராசு அப்பகுதியில் ஆடுகளை வெட்டி மக்களுக்கு இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் சென்று விசாரணை செய்ய முடிவெடுத்தார். அதன்படி அவர் ராயபுரம், செந்துறை, பொன்பரப்பி உட்பட பல்வேறு ஊர்களுக்குச் சென்று ஆட்டிறைச்சி வியாபாரிகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது ஒரு ஆட்டு வியாபாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது பொய்யாத நல்லூர் சரவணன், உஞ்சினி ராமு ஆகிய இரு இளைஞர்களும் ஒரு ஆட்டை விற்பதற்கு கொண்டு வந்து வியாபாரியிடம் இருவரும் விலை பேசிக் கொண்டிருந்தனர். அதை நேரடியாக கண்ட ராயபுரம் கோவிந்தராசு களவு போன தமது ஆடு அது என்பதை அடையாளம் கண்டு கொண்டார். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் துணையுடன் அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினர் சரவணனை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பொய்யாத நல்லூர் சரவணன் இதேபோன்று பல இடங்களில் ஆடு, மாடுகளை திருடி விற்பனை செய்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.