திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார்.
அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.