திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் ‘திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காவியா (வயது 19). நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகன் அபிமணி (வயது 21) என்பவரை கடந்த ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்தேன்.
இந்நிலையில் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து அபிமணி, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என கூறிவிட்டார். மேலும் நம் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டால் பின்னர் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பவைத்தார். அபிமணியோட சகோதரர்கள் சிவசக்தி, சிவானந்தம் ஆகியோர் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வந்த என்னை இரவு எட்டு மணி அளவில் வழிமறித்து திருமணம் ஏற்பாடு செய்துள்ளோம். உடனே வந்து என்னுடைய தம்பியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவன் தற்கொலை செய்து கொள்வான் என்று கூறி என்னை அழைத்துச் சென்று அடுத்த நாள் காலை சாணிபட்டி விநாயகர் கோவில் வைத்து அவர்கள் சகோதரர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவரது உறவினர் ஒருவர் மூலமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் என்னுடன் வாழ்ந்தார்.
பின்னர் சுமார் 20 நாட்கள் கழித்து, திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள காவல் நிலையத்திலிருந்து எங்களை அழைப்பதாக கூறி என்னிடம் இருந்த மொபைல் போன், மற்றும் நான் கையில் வைத்திருந்த ரூபாய் 10,000 மற்றும் ஆதார் கார்டை வாங்கிவிட்டு என்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த காவல் உதவி ஆய்வாளர் நல்லதம்பி என்னை குடும்பத்தினருடன் வீட்டுக்குச் செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால், நான் போக மாட்டேன் என்று கூறினேன். ஆனால் வலுக்கட்டாயமாக என்னை என்னுடைய குடும்பத்தார்களுடன் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணப்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் இடத்தில் புகார் கொடுத்து அந்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சதித்திட்டம் தீட்டி என்னை திருமணம் செய்து என்னுடன் உறவு கொண்டு பின்னர் என்னை சாதிப் பெயரைச் சொல்லி விலக்கி வைத்த என் கணவன் அபிமணி மற்றும் அவருக்கு துணையாக இருந்த சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.