கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு அவரது வீட்டில் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் அறிந்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கடந்த மார்ச் மாதம் அந்த மாணவி திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது பள்ளி செல்வதற்கு பேருந்து நிலையத்தில் காத்திருந்தவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சரக்கு வாகனத்தில் பள்ளியில் விடுவதாக ஏற்றிச் சென்றதாகவும் பின்னர் தன்னை திருக்கோவிலூர் அருகே உள்ள அத்திப்பாக்கம் காப்புக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் வயது 24 என்கின்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.