இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் பேசினர்.
இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று (17.12.2024) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் , ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்டனர். இதனையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் அமைச்சர் அமித்ஷாவின் பேச்சிற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது கட்சியின் எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். ‘அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்’
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும்…— TVK Vijay (@tvkvijayhq) December 18, 2024