மூன்றாவதும் பெண் குழந்தை பிறக்கும் என எண்ணி மருமகளை கருசிதைப்பு செய்யச்சொல்லி துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் அந்த பெண்ணின் மாமியார், அவரை தொடர்ந்து வரதட்சனை கொடுமை செய்துள்ளார் மேலும், பெற்றோரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் வாங்கி வருமாறு தொந்தரவு செய்துள்ளார்.
இதற்கு அந்த பெண் மறுத்ததால், ஆத்திரமடைந்த மாமியார் மற்றும் கணவர் அந்த பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர். இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் அந்த பெண், மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஏற்கெனவே, இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துவிடும் என்ற எண்ணத்தில், தனது மருமகளிடம் அடிக்கடி கருசிதைவு செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும், கணவரும் மாமியாரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட சண்டையால், அந்த பெண்ணை கடந்த மார்ச் மாதத்தில் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் சிவில் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் பேரில் பெண்ணின் மாமியார் மற்றும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.