கோவை புட்டுவிக்கி பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கை, இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், புட்டுவிக்கி பகுதியின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலையில், எப்போதும் போல ஊழியர்கள் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்துள்ளனர். அப்போது, காரில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அவரிடம் எவ்வளவு ரூபாய் பணத்திற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று, பணியில் இருந்த பெட்ரோல் பங்கின் பெண் ஊழியர் கேட்டுள்ளார். அதற்குப் பதில் அளித்த அந்த நபர், பணம் கொடுக்காமல் 3 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பும் படி கூறியுள்ளார். சரி, பெட்ரோல் நிரப்பிய பிறகு பணம் தருவார் என்று நினைத்துக்கொண்டு பெண் ஊழியரும் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
இதையடுத்து, பெட்ரோல் நிரப்பியதிற்கான தொகையை, காரிலிருந்த நபரிடம் கேட்டுள்ளார். அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பிய அந்த நபர், நொடிப் பொழுதில் பணம் கொடுக்காமல் காரில் அதிவேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்கின் பெண் ஊழியர் கூச்சலிட்டுக் கொண்டே ஓடிச் சென்று காரை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால், கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து புட்டுவிக்கி பெட்ரோல் பங்க் தரப்பில் இருந்து, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெட்ரோல் பங்கின் சிசிடிசி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஸ்விஃப்ட் காரில் வந்த மர்ம நபர் பெட்ரோல் நிரப்பி விட்டு, பணம் கொடுக்காமல் தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது தெரிய வந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார், பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சியில் உள்ள காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.