விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் 23 வயது வெற்றிவேல். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் அதேபகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று அந்தப் பெண்ணும் வெற்றிவேலும் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் ராமநாதசாமி கோவிலுக்குச் சென்று திடீர் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து அவர்கள் இருவரும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கூறிமனு அளித்தனர்.
இந்நிலையில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இந்த திருமணம் குறித்து இரு குடும்பத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அந்த பெண் வெற்றிவேலை விட்டுவிட்டு தனது தாய், தந்தைதான் முக்கியம் என குடும்பத்தாருடன் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த வெற்றிவேல் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தாய், தந்தை தான் முக்கியம் என்று சென்று விட்டாரே என்று மனம் நொந்து நேற்று மதியம் 2 மணி அளவில் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வெற்றிவேல் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் 'திருமணம் ஆன முதல் நாளே எனது காதல் மனைவியைப் பிரிந்ததால் மனம் உடைந்து போனேன். பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் மிரட்டினர். அதனால்தான் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' என்று அந்த கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு வெற்றிவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.