நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதியும், இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஆனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் விடீயோவை வெளியிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி” எனக் குறிப்பிட்டுள்ளர். செல்லூர் ராஜூ பகிர்ந்துள்ள இந்த வீடியோவானது கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ராகுல் காந்தியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக அதன்பின்னர் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதற்கிடையே பாஜகவின் தலைவர்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் கடும்விமர்சனங்களை முன்வைத்து வந்தனர் அதே போன்று. பாஜகவினரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் குறித்து பேசியது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் உடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.