திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் காயத்ரி( 24). இவர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரியிடம் குடும்ப செலவுக்காக கடந்த மார்ச் மாதம் பட்டாவை வைத்து ரூபாய் 50,000 பணம் வாங்கிதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பணத்திற்கு நூற்றுக்கு 15 ரூபாய் என்ற வட்டி விகிதத்தில் வட்டியாக ஒரு வாரத்திற்கு ரூ.8.500 வட்டி செலுத்தியதாகவும் மேலும் இதுவரை ராஜசேகருக்கு 80,000 ரூபாய் வட்டி பணம் செலுத்தியதாகவும் காயத்ரி கூறுகிறார்
அதனைத் தொடர்ந்து தற்போது வட்டி கட்டுவதற்கு காயத்ரியிடம் பணம் இல்லாததால் வட்டி பணம் கட்டமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் காயத்ரிக்கு போன் செய்து அவரை ஆபாச வார்த்தையால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த காயத்ரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து எண்ணெயை உடல்மீது ஊற்ற முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை காயத்ரி நேரில் சந்தித்து கந்து வட்டியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு மனு அளித்தார். மனுவைப் பெற்று கொண்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.