சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் மனைவி உமா(25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பரங்கிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராணி(29) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.
இதனிடையே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் குமார் மற்றும் அவரது மனைவி கமலின் இருவரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். கர்ப்பிணியான கமலின் பிரசவத்திற்காகத் திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 22 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ராணியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் மருத்துவமனையிலிருந்த கமலினுக்கு உதவியாக இருந்துள்ளார் உமா. அந்த சமயத்தில், உமா, கமலின் குழந்தையை ஒரு பையில் வைத்து யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் ராணிக்கு ஃபோன் செய்த உமா, உன்னை சந்திக்க பரங்கிநத்தம் கிராமத்திற்கு வருவதாகத் தகவல் கொடுத்துள்ளார். அதன்படி நேற்று பரங்கிநத்தம் கிராமத்திற்கு கைக்குழந்தையுடன் வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராணி உனக்குத்தான் குழந்தையே இல்லையே... யாரு இந்த குழந்தை என்று கேட்க, இது என்னுடைய குழந்தைதான் என்று உமா கூறியுள்ளார்.
இந்தநிலையில் காணாமல் போன குழந்தையின் பெற்றோர் திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உமா இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். முதல் நாள் சென்னையிலிருந்த உமா, மறுநாள் பரங்கிநத்தத்தில் இருந்ததைப் பார்த்த திருப்பூர் டிஎஸ்பி அப்பன்துரை தலைமையிலான போலீசார் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பரங்கிநத்தத்திற்கு விரைந்தனர். அங்கு உமாவை கைது செய்து, அவரிடம் இருந்த குழந்தையை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் திருப்பூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.