விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.