ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் திண்டுக்கல் மாநகரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான கோரிக்கை மனு மற்றும் கிராமங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர்.
அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து களப்பணி ஆற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்கள் பணியாற்றக்கூடிய பகுதிகள் குறித்து கேட்டறிந்ததோடு வரலாறு காணாத வெற்றியை பெறும் அளவிற்கு ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட வேண்டும் எனக் கூறினார்.
அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “தமிழகத்தில் 40க்கு40 பாராளுமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெற்று வருகின்றன. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து கிராமங்களும் சாலை வசதி, குடிதண்ணீர், தெருவிளக்கு வசதி நூறு சதவிகிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட தார்ச்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று தங்கள் விளை பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு சிரமமின்றி எடுத்துச் சென்று பயன்பெற்று வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழகம் முதல்வரின் சாதனை திட்டங்களையும், மாணவர்கள் மற்றும் ஆதரவற்றோர் மற்றும் பெண்களின் நலனுக்காக அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் சென்று எடுத்துரைத்தாலே எளிதாக மாபெரும் வெற்றி பெறலாம்” என்று கூறினார்!