Skip to main content

'மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்; நேற்று அழுதுட்டேன்' - தங்கர் பச்சான் பேட்டி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
pmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கடலூரில் வாக்கு சேகரிப்புக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், ''கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனால், உள்ளூரில் இருக்கின்ற சாலைகள் எல்லாம் போய்ப் பாருங்கள். உள்ளே இருக்கக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு தரமற்ற நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதைப் பாருங்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் மேல் பிரச்சனை இல்லை. பிரச்சனை மக்களிடம் இருக்கிறது.

இந்த மக்கள் எனக்கான வசதியை செய்து கொடுக்காமல் ஊருக்குள்ள வந்து ஓட்டு கேட்காதீர்கள் என ஏன் கேட்கவில்லை. என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள். தொடர்ந்து வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு கொண்டே இருந்தீர்களா? நீங்கள் ஓட்டுப் போடணும் என்ற அவசியமே கிடையாது. எலக்சன் எதற்கு தெரியுமா வைக்கிறாங்க? உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பிரச்சனை இருந்தால், யார் நமக்கு வந்தால் செய்வார்கள், யார் திறமைசாலி என்று பார்த்து ஓட்டு போட வேண்டும். அப்படி பார்த்து ஓட்டு போட்டுள்ளீர்களா? பணம் கொடுக்குறவங்க 20 கார்ல அடியாள் மாதிரி ஆளுங்கள கூட்டிக்கிட்டு வர்றாங்க. இதே மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தா என்ன கிடைக்கும்?  நான் இந்த மண்ணிற்கான ஆளாக இருந்தாலும் சில ஊர்களை நான் பார்த்து அழுதுவிட்டேன். கேட்டால் அமைச்சர் அந்த ஊரிலேயே இருக்கிறார். அவர் பத்து வருஷமாக அமைச்சராக இருந்திருக்கிறார். ஒரு பேருந்து வசதி கிடையாது. எந்த வசதியும் கிடையாது. மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.

சார்ந்த செய்திகள்