நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் செய்து வருகின்றனர். சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பாக இளைஞரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது.
உதகை தலைகுந்தா பகுதியில் உள்ள காந்திநகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சிவா. கூலி வேலை செய்து வந்த சிவாவின் ஒன்பது வயது மகளை நேற்று அதே தலைகுந்தா பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற 28 வயது இளைஞர் அழைத்துச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த ஊர் மக்கள் ஒன்றாக திரண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தற்பொழுது வரை இந்த இளைஞரை கைது செய்யவில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை பிடித்த பொதுமக்கள் அஜித்தை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அஜித் என்ற அந்த இளைஞர் ஏற்கனவே ஓராண்டுக்கு முன்பே மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்தார். தொடர்ந்து இந்த வழக்கானது நடைபெற்று வரும் நிலையில், உயர்நீதிமன்றத்திற்கு சென்று ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த இளைஞரை வெளியே விடக்கூடாது, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.