கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக பல ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வருகிறது. சில சமயங்களில் தமிழக எல்லையோரம் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளை தமிழக பகுதியைச் சேர்ந்தவர்கள் கையும் களவுமாக பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாகக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் கேரளாவில் இருந்து 70 பேர் கொண்ட 6 குழுவினர் 16 லாரிகளுடன் நேற்று (22/12/2024) நெல்லை வந்து கழிவுகளை அகற்றினர். இந்நிலையில் கேரளாவில் இருந்து மீண்டும் லாரிகளில் கழிவுகளை ஏற்றி வந்த இருவர் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக குமரி மாவட்டத்திற்குள் நுழைந்த லாரியை சோதனையிட்ட பொழுது அதில் மனித கழிவுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. விசாரணையில் கேரளாவில் இருந்து மனிதக் கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்ட தேவா, வள்ளி முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மனிதக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்லும் செப்டிக் டேங்க் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது மீண்டும் தமிழக எல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.