தஞ்சாவூரில் திங்கள்கிழமையான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் குளிச்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் தனது கணவர் விஜயராகவனை மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று சித்திரவதை செய்து வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் கார்த்திகாவிடம் கேட்ட பொழுது, “என் கணவர் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். என் கணவரின் தம்பி மலேசியாவில் கம்பெனி உரிமையாளரிடம் இருந்து 13 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் என் கணவரை அடைத்து வைத்துள்ளார்கள். கடன் வாங்கிய பணம் வட்டி எல்லாம் சேர்ந்து 70 லட்சத்தில் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொடுத்தால் தான் உன் வீட்டுக்காரரை விடுவேன் இல்லை என்றால் விடமாட்டேன் என மிரட்டல் விடுக்கிறார்கள்.
நேற்றெல்லாம் அடித்துள்ளனர். முகம் எல்லாம் வீங்கிப் போய் இருந்தது. இன்று 12 மணிக்குள் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்கள். நேற்றே எனது நகைகள் அனைத்தையும் விற்று 5 லட்சம் பணம் கொடுத்தோம். அது போதாது எனச் சொல்லி வீட்டுப் பத்திரங்களை எல்லாம் கேட்கிறார்கள். எனவே எனது கணவனைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்துள்ளோம்” எனக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.