ஆத்தூர் அருகே, தலை முடியை சரியாக வெட்டிக்கொண்டு வரும்படி கூறிய தலைமை ஆசிரியரை காலி மதுபான பாட்டிலால் பிளஸ்2 மாணவன் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் மாணவன் ஒருவன், தலை முடியை சரியாக வெட்டாமல், பின்பக்கத்தில் குடுமி வைத்தது போல் வித்தியாசமாக சிகையலங்காரம் செய்து கொண்டு பள்ளிக்கு வந்திருந்தான். இதைப்பார்த்த பள்ளித் தலைமை ஆசிரியர், அந்த மாணவனைக் கண்டித்துள்ளார். இதுபோன்ற சிகையலங்காரத்துடன் பள்ளிக்கு வரக்கூடாது என்றும், சரியாக முடி வெட்டிக்கொண்டு வருமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
தலைமை ஆசிரியர் அறிவுரை கூறியதை பிடிக்காத அந்த மாணவன், ஆத்திரத்தில் தலைமை ஆசிரியர் அலுவலக அறையில் இருந்த மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை உடைத்து சேதப்படுத்தினான். திடீரென்று அந்த மாணவன் வெறி பிடித்தது போல் நடந்து கொண்டதை பார்த்து தலைமை ஆசிரியர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து நின்றார். மேஜை, நாற்காலிகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு, என்னாச்சோ ஏதாச்சோ என பதறியபடி மற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அறைக்கு ஓடிவந்து அந்த மாணவனை சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறினர். அதன்படி, அந்த மாணவன் சார்பில் அவனுடைய பெரியப்பா பள்ளிக்கு வந்தார். அப்போது அந்த மாணவன், தலைமை ஆசிரியர் என்னை மட்டும்தான் குறி வைத்து இப்படி கேள்வி கேட்கிறார். மற்ற மாணவர்கள் என்னை விட மோசமாக முடிவெட்டிக்கொண்டு வந்தாலும் யாரும் எதுவும் கேட்பதில்லை என்று கூறியவாறே, கீழே கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து வந்து தலைமை ஆசிரியரை குத்த வந்தான்.
இதைப்பார்த்த மற்ற ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவனை சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டனர். இதுகுறித்து ஆத்தூர் காவல்நிலைய காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், காவல்துறையினரும் சம்பவ இடம் விரைந்தனர். புகாருக்கு உள்ளான மாணவன், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவனை அழைத்து கவுன்சலிங் செய்தனர். இனிமேல் இதுபோல முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுரை வழங்கினர்.
இது ஒருபுறம் இருக்க, மாணவன் பள்ளியில் இடைவேளைக்காக ஒலிக்கப்படும் மணியை உடைக்கும் காட்சிகளும், விசாரணையின்போது, 'ஆமாம்... நான் ரவுடிதான்...' என்று திமிராகப் பேசும் காட்சிகளும் கொண்ட காணொளி பதிவுகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண் ஆசிரியர்களை மரியாதைக் குறைவாக பேசுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் காட்சிகளும், தலைமை ஆசிரியரை அந்த மாணவன், 'அந்த ஆர்ட்ஸை கூப்பிட்டுக் கேளுங்கள்' என்று கண்ணியமின்றி பேசும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. விசாரணையின்போது, மாணவனை சீருடை அணிந்த காவலர் ஒருவர் கையால் பிடித்திருப்பதும் பதிவாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் அண்மைக் காலமாக ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், மஞ்சினி அரசுப்பள்ளியில் நடந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.